நவம்பர் 25-ம் தேதி முதல் 'கர்ணன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.


மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கர்ணன்'. இதில் லால், ராஜிஷா விஜய, யோகி பாபு, கெளரி கிஷன், லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதன் பெரும்பகுதி படப்பிடிப்பை திருநெல்வேலிக்கு அருகில் பிரம்மாண்டமான கிராமம் போன்ற அரங்குகள் அமைத்து படமாக்கியுள்ளனர். அந்த அரங்கில் மட்டுமே சுமார் 90% படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டது படக்குழு. கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்ட போது, திருநெல்வேலிக்கு அருகே போடப்பட்ட அரங்குகளில் படமாக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால், சென்னையிலேயே அதே போன்ற அரங்குகள் அமைத்து முடித்துவிட்டனர். இதில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையுமே முடித்துவிட்டார்கள்.

ஆனால், நவம்பர் 25-ம் தேதி முதல் திருநெல்வேலிக்கு அருகே உள்ள அரங்குகளில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதில் சிறு சிறு காட்சிகள் மட்டும் தான் காட்சிப்படுத்தவுள்ளனர். அதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும். அதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் 'அத்ரங்கி ரே' படத்தின் படப்பிடிப்புக்காக டெல்லியில் இருக்கிறார் தனுஷ். அந்தப் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த மாதம் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top