ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவிருப்பதாகவும், அப்படத்தின் வாய்ப்பு எப்படி அமைந்தது என தனுஷ் தெரிவித்திருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். 'தொடரி' மற்றும் 'கொடி' ஆகிய படங்களின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், கெளதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்.
பிரபல ப்ரெஞ்ச் நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard' திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். தனுஷூடன் இணைந்து UmaThurman மற்றும் Alexandra Daddario முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் ஹாலிவுட் படப்பிடிப்பு எப்போது, எப்படி அந்த வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து தனுஷ் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
"ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறேன். நன்றாக விற்பனையான ஒரு நாவலை படமாக பண்ணுகிறோம். அந்த இயக்குநர் என்னை அணுகிய விதம் ரொம்ப பிடித்திருந்தது. இங்கு இருக்கும் நடிகர்கள் தேர்வு குழு "எங்கள் மனதில் ஒருவர் இருக்கிறார். நாங்கள் 10 நடிகர்களின் படத்தை அனுப்புகிறோம். ஆனால், நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள் என எங்களுக்கு தெரியும்" என அனுப்பி இருக்கிறார்கள். இவர்களும் என்னை மனதில் வைத்து அனுப்ப, இயக்குநரும் 10 படங்களையும் பார்த்துவிட்டு என்னை தேர்வு செய்திருக்கிறார்.
ஹாலிவுட் படத்தின் இயக்குநரும் நான் நடித்த முதல் படத்தில் இருந்து கடைசி படம் வரை அனைத்து படத்தையும் பார்த்திருக்கிறார். அதற்குப் பிறகு என்னைத் தொடர்பு கொண்டார். லண்டனில் சந்தித்து பேசினோம். "இந்த படம் பண்ற என்பதை தவிர வேறு எதைப் பற்றியும் பேச நான் அனுமதிக்க மாட்டேன்" என்று தான் முதலில் சொன்னார்.
இந்த கதாபாத்திரத்துக்கு உன்னை தவிர வேறு எந்தொரு நடிகரையும் நினைக்க முடியவில்லை. நீ தான் செய்ய வேண்டும் என்றார்கள். நேரமின்மையால் லண்டனுக்கு செல்லும் போது விமானத்தில் தான் கதையை படித்துக் கொண்டே சென்றேன். எனக்கென்றே செய்த கதையைப் போலவே தெரிந்தது. " என்று அந்நிகழ்ச்சியில் தனுஷ் தெரிவித்திருக்கிறார்.
0 comments:
Post a Comment