னுஷுக்கு இது ஹாட்ரிக் சீஸன்! 'அனேகன்’, 'மாரி’யைத் தொடர்ந்து 'தங்கமகன்’ எனத் தடதடக்கிறார் தனுஷ். சென்னையின் மழை வெள்ளத்தில் நீந்தி 'வொண்டர்பார்’ அலுவலகத்துக்குள் நுழைந்தால், செம ஃப்ரெஷ் தனுஷ். 
''சினிமாவுக்குள்ள வரும்போது நான் ரொம்பச் சின்னப் பையன். அதனால பெத்தவங்க பேச்சைக் கேட்காத, மத்தவங்க பேச்சை மதிக்காத பையன் கேரக்டர்களா நிறைய நடிச்சேன். அந்தப் படங்கள் அடுத்தடுத்து ஓடினதால, தொடர்ந்து அதே மாதிரியான கதைகளே எனக்கு வந்தது. இன்னமும் ஒட்டியிருக்கும் அந்த இமேஜை இப்போ 'தங்கமகன்’ உடைப்பான்'' - நம்பிக்கையுடன் நிமிர்ந்து அமர்கிறார் தனுஷ்.
'' 'வி.ஐ.பி-2’ என்பதால் பெரிய பிரஷர் இருந்திருக்குமே... எப்படிச் சமாளிச்சீங்க?''
''இது 'வி.ஐ.பி-2’ இல்லை. புதுசா வேற கதை; வேற படம். 'வி.ஐ.பி-2’-க்கான ஐடியா இருக்கு. அதை அடுத்த வருஷம் எதிர்பார்க்கலாம். 'தங்கமகன்’ செம ஃபேமிலி என்டர்டெய்னர். நம்ம வீட்டைச் சுற்றி நடக்கிற வழக்கமான விஷயம். ஆனா, இந்த ஜெனரேஷன்ல அது எப்படி நடக்குதுங்கிறதுதான் கதை. ஒரு மகன் எப்படி இருக்கணும், ஒரு கணவன் எப்படி இருக்கணும்கிறதுக்கு உதாரணமா 'தங்கமகன்’ இருப்பான். அந்த வகையில் நான் தமிழ்நாட்டின் தங்கமகன். முதல்ல நான் யோசிச்ச தலைப்பு வேற. ஆனா, தயாரிப்பாளரும் யூனிட்டும். ' 'தங்கமகன்’ ரொம்பச் சரியா இருக்கும்’னு சொன்னாங்க. அதையே ஃபிக்ஸ் பண்ணிட்டோம்.''
''ஒரு நல்ல பையனுக்கு எதுக்கு சமந்தா, ஏமி ஜாக்சன்னு ரெண்டு ஹீரோயின்கள்?''
''ஹீரோ, தன் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டத்துல ரெண்டு பெண்களைச் சந்திக்கிறார். அதனாலதான் ரெண்டு ஹீரோயின்கள். 'இவங்கதான் செகண்ட் ஹீரோயின்’னு சொல்ல முடியாத அளவுக்கு ரெண்டு கதாபாத்திரங்களும் படத்துக்கு ரொம்ப முக்கியம்.''
'' 'வட சென்னை’ படம் எப்போ ஆரம்பிக்கிறீங்க?''
'' 'கல்ட் கிளாசிக்’னு சொல்வாங்க இல்லையா... அப்படி தமிழ் சினிமாவுல சில படங்கள்தான் இருக்கு. எடுக்கிறதுக்கு முன்னாடியே சொல்றேன்... 'வட சென்னை’ அப்படி ஒரு கல்ட் கிளாசிக் படம். இதுல நான் நடிக்கப்போறதால சொல்லலை... வெற்றிமாறன் இயக்குவதால் சொல்றேன். 'விசாரணை’ படம் வந்ததும் இயக்குநரா வெற்றி மாறன் இன்னும் வேற லெவலுக்குப் போவார் பாருங்க. ' 'வட சென்னை’ கொஞ்சம் பெரிய கதை. ரெண்டு பாகங்களாத்தான் எடுக்க முடியும்’னு 'ஆடுகளம்’ சமயத்திலயே வெற்றிமாறன் சொன்னார். நாங்க ரெண்டு பேரும் தொடர்ந்து படம் பண்ணினதுனால 'ஒரு பிரேக் எடுத்துக்கலாம்’னு நான்தான் சொன்னேன். அப்புறம் அந்தக் கதை வேற யார் யார்கிட்டயோ போய் திரும்பவும் என்கிட்டயே வந்திருக்கு. அடுத்த வருஷம் மார்ச்ல 'வட சென்னை’ படப்பிடிப்பு தொடங்கும். சமந்தா ஹீரோயினா கன்ஃபர்ம் ஆகியிருக்காங்க. மத்த விஷயங்களைச் சீக்கிரம் சொல்றேன்.''
'' 'ராஞ்சனா’, 'ஷமிதாப்’னு அதிரடி இந்தி படங்கள் நடிச்சுட்டீங்க. பாலிவுட் உங்களை விடாமல் துரத்துமே?''
''தமிழ்ல நடிப்பு, தயாரிப்புனு பிஸியா இருக்கேன். இதை எல்லாம் ஒரு நாலு மாசம் நிறுத்திட்டுப்போற அளவுக்கு அந்த ஸ்கிரிப்ட் ஸ்பெஷலா இருக்கணும். நிறையக் கதைகள் வந்துட்டுத்தான் இருக்கு. அதுல ஒண்ணு கொஞ்ச நாளா மனசுல ஓடிட்டிருக்கு. அடுத்த வருஷம் நிச்சயம் ஒரு இந்தி படம் பண்ணுவேன்.''
''நிறைய வெரைட்டி ரோல்கள்ல நடிச்சுட்டீங்க. உங்க கலெக்‌ஷன்ல மிஸ் ஆனது டபுள் ஆக்‌ஷன். இப்ப அதுவும் பண்ணப்போறீங்களாமே?''
''ஆமா... 'எதிர்நீச்சல்’, 'காக்கிசட்டை’ படத்தோட இயக்குநர் துரை செந்தில்குமார் படத்துல எனக்கு டபுள் ஆக்‌ஷன் ரோல். ரெண்டு, மூணு தடவை என்கூட நடிக்க இருந்து மிஸ் ஆன த்ரிஷாதான் ஜோடி. ஷாம்லியும் நடிக்கிறாங்க. இது ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர்; பக்கா கமர்ஷியல் படம்.''
'' 'மாரி-2’ பற்றின பேச்சும் வருதே?''
'' 'மாரி’ கேரக்டரை வடிவமைச்சப்பவே நிறையப் பாகங்கள் எடுக்கணும்னு முடிவு பண்ணியிருந்தோம். 'மாரி’ பற்றி பாசிட்டிவ், நெகட்டிவ்னு ரெண்டும் கலந்துதான் விமர்சனம் வந்தது. ஆனா, அது எல்லாருக்குமே பெரிய லாபம் கொடுத்த படம். அதுல பண்ணின தவறுகளை சரி பண்ணி, இன்னும் மாஸ் ரீச் ஆகும்படி 'மாரி-2’ எடுப்போம்.''
''தமிழ் சினிமாவின் 'டெட்லி காம்போ’-வில் ஒண்ணு தனுஷ்-செல்வராகவன். அடுத்து எப்போ?''
''ரொம்ப சீக்கிரமே எதிர்பார்க்கலாம். அண்ணன் சில முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கு. அதெல்லாம் முடிஞ்சு, அவர் என்னை 'வாடா’னு சொன்னார்னா... போய் நிற்கவேண்டியது என் கடமை. அது சீக்கிரமே நடக்கும்.''
''ஒரு நடிகராக, தயாரிப்பாளராக தேசிய விருது வாங்கியாச்சு. அடுத்த விருது எதுக்கு?''
''நான் எழுதுற பாடல்களுக்குக் கிடைக்குமானு தெரியலை. கிடைச்சா, ரொம்ப சந்தோஷப்படுவேன்.''
''நீங்க எழுதின பாடல்களுக்கு கிடைச்ச சீரியஸ் பாராட்டு என்ன?''
'' 'வி.ஐ.பி’-யில் 'அம்மா அம்மா...’ பாட்டு ரிலீஸ் ஆனப்போ, தினமும் யாராவது அழுதபடியே போன் பண்ணுவாங்க. 'என் அம்மா என்கூடவே இருக்கிற மாதிரி இருக்கு. மேல இருந்து அவங்க எனக்காகப் பாடுற மாதிரி இருக்கு’னு சொல்வாங்க. ஒரு பாடலாசிரியர்னு என்னைச் சொல்லிக்க இப்பவும் கூச்சமா இருக்கு. ஆனா, பாடல்கள் எழுதுபவன்கிற வகையில், அது எனக்கு திருப்தி தந்த பாட்டு. என் அக்காவின் மாமியார் டாக்டர் ஜமுனா ஸ்ரீனிவாசன் ரொம்ப போல்டு டைப். அவங்களே ஒருநாள் கண்கள் கலங்கி 'அம்மா என்கூட இருக்கிறதா உணர்ந்தேன்’னு சொன்னாங்க. அதுதான் எனக்கு ஸ்பெஷல் பாராட்டு.''
''சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிகுமார், இப்போ எஸ்.ஏ.சி. - உங்களுக்கு அப்பாவா நடிக்கணும்னா இயக்குநரா இருக்கணுமா... இல்ல படப்பிடிப்புல அவங்ககிட்ட டைரக்‌ஷன் கத்துக்கிறீங்களா?''
''மூணு பேரையும் என் பட இயக்குநர்கள்தான் விரும்பிக் கேட்டாங்க. நீங்க சொன்னதுபோல அவங்ககிட்ட கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு என்பது உண்மை. ஆனா, படப்பிடிப்புல அதைச்
செஞ்சா... என்னால சரியா நடிக்க முடியாது. எனக்குள்ள இயக்குநர் ஆசை இருக்கு. அதுக்கான பொறுப்பு இன்னும் வரலைனு நினைக்கிறேன். அது வந்துட்டா... நிச்சயம் படம் இயக்குவேன்.''
'' ''3’ எனக்கு திருப்புமுனைப் படம்’னு ஸ்ருதி ஒரு பேட்டியில் சொன்னாங்க. ஆனா, அந்தப் படம் பெருசா ரீச் ஆகலையே?''
''அந்தப் படத்துல சில பெரிய தவறுகள் உண்டு. அதுக்கு முழுக்க நான்தான் காரணம். தவிரவும் 'கொலைவெறி’ பாட்டுல இருந்த ஜாலி மூட் படத்துல இல்லை. அது ஒரு தவறான எதிர்பார்ப்பை உண்டாக் கிருச்சு. ஆனா, என் மார்க்கெட்டைவிட ரெண்டு மடங்கு பிசினஸ் பண்ணிக் கொடுத்ததும் அதே 'கொலைவெறி’ பாட்டுத்தான். என் முகத்தை உலகின் மூலைமுடுக்கு எல்லாம் கொண்டுபோய் சேர்த்ததும் அந்தப் பாட்டுதான். அதுதான் படத்துக்கு வரமும் சாபமும்.''
'' 'காக்கா முட்டை’, 'நானும் ரௌடிதான்’னு புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தர்றீங்க. உங்களுக்கு கதை முக்கியமா... அல்லது இளம் இயக்குநர்களை வளர்த்துவிடணும்கிற எண்ணமா?''
''வளர்த்துவிடுறேன்னு சொல்லக் கூடாது... முடியாது. சில திறமைசாலிங்க நம்ம கண்ணுலபடுறாங்க. அவங்களுக்கு ஒரு பிளாட்பார்ம் அமைச்சுக் கொடுக்கிற சக்தியை கடவுள் நமக்குக் கொடுத்திருக்கார்; அதைச் செய்யுறேன். அனிருத்தை அறிமுகப்படுத்தினது வேற. ஆனா, மணிகண்டனும் விக்னேஷ் சிவனும் யாருனே முதலில் தெரியாதே. அவங்க திறமையை நம்பினேன்... அவ்ளோதான். இவங்க என் கம்பெனி மூலமா அறிமுகம் ஆகிறாங்க அப்படிங்கிற சின்ன சந்தோஷமும் இதுல இருக்கு. 'காக்கா முட்டை’ வரிசையில் அடுத்து ஒரு படம் ஆரம்பிக்கப்போறோம். அதுவும் இதே மாதிரி வெற்றிபெறும்னு நம்புறேன்.''
''ஓ.கே விஷயத்துக்கு வருவோம். விக்னேஷ் சிவன் - நயன்தாராவுக்கு வாழ்த்துகள் சொல்லிட்டீங்களா?''
''எதுக்கு? எனக்கு எதுவும் தெரியலையே... என்ன விசேஷம்?'' - திருப்பி கேள்வி கேட்டுவிட்டுச் சிரிக்கிறார் தனுஷ்!


0 comments:

Post a Comment

 
Top